
உதயசங்கர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றினார்.
1950 -இல் அழ.வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்படாமல் நின்றபின் மாநில அளவில் சிறார் இலக்கியத்துக்கான அமைப்புகள் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் சிறார் எழுத்தாளர் செ. சுகுமாரன்,உதயசங்கர், மணிகண்டன் ஆகியோர் இணைந்து 2017-ல் சென்னை போரூரில் தமிழக அளவில் சிறார் எழுத்தாளர் சங்கத்தை மீண்டும் நிறுவ முடிவெடுத்தனர்.
ஜூன் 13, 2021-ல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.
உதயசங்கர் அதன் மாநிலத்தலைவராக பணியாற்றி வருகிறார்.
வாழ்க்கை குறிப்பு
உதயசங்கர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பெப்ருவரி 10, 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்குப் பிறந்தார். கோயில்பட்டி ஏ.வி.உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கோயில்பட்டி ஜி.வேங்கடசாமி நாயுடு கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.
உதயசங்கரின் மனைவி பெயர் மல்லிகா. நவீனா, துர்கா என்று இரு மகள்கள். இந்திய ரயில்வே துறையில் நிலையத் தலைவராகப் (station master) பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.
உதயசங்கர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தொழிற்சங்கத்திலும், அதன் இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார்.
உதயசங்கர் 1978 முதல் கவிதைகள் கவிதைகள் எழுதத் தொடங்கினார். நாறும்பூநாதன் நடத்திய மொட்டுகள் என்னும் கையெழுத்துப் பத்திரிகையில் முதல் கதை வெளிவந்தது. கோயில்பட்டியின் இலக்கியச் சூழலுக்கு அதன்பின் அறிமுகமானார்.
உதயசங்கர் எழுதிய முதல் சிறுகதை மார்ச்,1980 -ல் செம்மலர் இலக்கிய இதழில் பிரசுரமானது. முதல் சிறுகதை நூல் ’யாவர் வீட்டிலும்’
1988 -ல் வெளியானது
உதயசங்கர் 1986 -ஆம் ஆண்டு வேளானந்தல் எனும் ஊரில் ரயில்வே ஊழியராக இருக்கையில் மலையாளம் கற்றுக்கொண்டார். 1995 முதல் மலையாளத்தில் இருந்து மொழியாக்கங்கள் செய்யத் தொடங்கினார். வைக்கம் முகமது பஷீர் எழுதிய 'சப்தங்கள்' உள்ளிட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். ஏராளமான சிறார் இலக்கிய நூல்களையும், இடதுசாரிக் கொள்கைகளை முன்வைக்கும் கட்டுரை நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார்.
உதயசங்கரின் நூல்களில் எண்ணிக்கையில் சிறார் இலக்கியப் படைப்புகளே மிகுதி. சிறார் இலக்கிய மொழியாக்கங்களும் செய்துள்ளார்.
விருதுகள்
-
லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது - 1993
-
தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது - 2008
-
உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015
-
எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது - 2016
-
கலை இலக்கியப் பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016
-
விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது - 2016
-
கு.சி.பா. நினைவு - சிறுவர் இலக்கிய விருது – 2017
-
நல்லி - திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது - 2017
-
தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 2017
-
கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது - 2018
-
அறம் தமுஎகச படைப்பாளர் விருது - 2019
-
பாலபுரஸ்கார் சாகித்ய அக்காதமி விருது 2023 (ஆதனின் பொம்மை சிறார் நாவலுக்காக)